Friday, 13 January 2017

ஜல்லிக்கட்டு விதிமுறைகள்

ஜல்லிக்கட்டு விதிமுறைகள்


ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆலோசனை கூட்டம்

ஜல்லிக்கட்டு விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி முன்னிலை வகித்தார். கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசின் வழிகாட்டுதலின்படி விதிமுறைகளுக்கு உட்பட்டு வருகிற 15-ந் தேதி அவனியாபுரத்திலும், 16-ந் தேதி பாலமேட்டிலும், 17-ந் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு விழா நடத்தப்பட உள்ளது. 

ஜல்லிக்கட்டு நடத்த காப்புத்தொகை எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது. வாடிவாசலில் இருந்து வெளியேறும் காளைகளை குறைந்தபட்சம் 15 மீட்டர் தூரத்திற்குள் மாடுபிடி வீரர்கள் பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். 15 மீட்டருக்கு மேல் மாட்டைப் பிடிக்க அனுமதி கிடையாது. 

கொம்புகளை சீவக்கூடாது

மாடுபிடி வீரர்கள் தங்கள் வயதினை உறுதி செய்திட வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை போன்றவற்றின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும். 

காளைகளுக்கு பசி, தாகம், ஊட்டச்சத்துக் குறைபாடு இருக்க கூடாது. உடல் ரீதியான துன்புறுத்தல் கூடாது. வலி, காயம் மற்றும் நோய்கள் பாதித்து இருக்கக் கூடாது. இவை உள்ளிட்ட விதிகளை காளைகளின் உரிமையாளர்கள் உறுதி செய்திட வேண்டும்.

காளைகளின் கொம்புகள் சீவப்பட்டு கூர் செய்யப்பட்டு இருந்தால் மருத்துவர் குழுவினர் கூர் மழுங்கச் செய்வார்கள். காளைகளுக்கு தேவையான தீவனம், தண்ணீர் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்படும். 

ஊக்கமருந்துக்கு தடை

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் ஊக்கமருந்து உட்கொண்டு இருந்தால் வெளியேற்றப்படுவார்கள். இதை கண்டுபிடிக்க தேவையான மருத்துவ உபகரணங்களுடன் மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். 

விழா நடைபெறும் இடங்களில் விளையாட்டுத் திடலில் தேங்காய் நார் பரப்பப்பட்டுள்ளதா? வாடிவாசலில் இருந்து வெளியேறும் காளைகள், பாதுகாப்பாக வெளியே சென்றடைகின்றனவா என்பதை காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும். 

சுற்றுப்புற பகுதிகளில் போதுமான கழிப்பிட வசதி, சுகாதார வசதிகளை மாநகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டினை கருத்தில் கொண்டு வெளிநாட்டு பயணிகள் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார். 

கூட்டத்தில் கருப்பையா எம்.எல்.ஏ., போலீஸ் துணை கமிஷனர் கங்காதரன், மாவட்ட வருவாய் அலுவலர் வேலுச்சாமி, உதவி கலெக்டர் (பயிற்சி) கில்லி சந்திரசேகர், இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்பு) கோபிநாத், வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், ஜல்லிக்கட்டு விழாக்குழு அமைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். 


No comments:

Post a Comment