நல்லதை செய்வோம் !
நரிகள் என்றாலே ஏமாற்றுப் பேர்வழிகள் என்று பெயர் ஏற்பட்டிருந்தது.
அதனால் அந்தக் காட்டுக்குள் நரிகளைக் கண்டாலே எல்லா விலங்குகளும் கடித்து விரட்டின. எனவே நரிகள் அந்தக் காட்டை காலி செய்து கொண்டு அடுத்த காட்டிற்குச் சென்றுவிட்டன.
இரண்டு தலைமுறைகள் கடந்துவிட்டன. மூன்றாவது தலைமுறையில் பரதன் என்ற இளம் நரி இருந்தது. அதற்கு தனது மூதாதையார் கதையைக் கேட்டதும் அவமானமாக இருந்தது. இந்த அவமானத்தை துடைத்து திரும்பவும் சொந்த காட்டில் வாழ வேண்டும். நம் இனத்தையும் சொந்த காட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என எண்ணியது.
அதற்காக பழைய காட்டிற்குச் சென்று அனைத்து விலங்குகளையும் சந்தித்து பேசுவது என்று முடிவெடுத்த பரதன் பயணத்தை தொடங்கியது.
பரதனைக் கண்ட மற்ற விலங்குகள், ‘புதிய வன் யாரோ வருகிறான்’ என்று கலங்கின. வயதான விலங்குகளோ நரியை அடையாளம் கண்டு கொண்டு, ‘இவன் இங்கு எங்கே வந்தான்’ என்று முறைத்தன. ‘அவனிடம் யாரும் பேச வேண்டாம்’ என்று இளைய தலைமுறைக்கு உத்தரவிட்டன.
“எங்கள் இனத்தை சகுனி குணம் படைத்தவர்கள், கூட இருந்தே குழி பறிப்பவர்கள். தந்திரசாலிகள் என்று யாரோ கட்டிவிட்ட கதையை நம்பலாமா? நாங்கள் மட்டும்தான் கெட்டவர்களா? மலர்களில் எல்லாமே மணமிக்கதா? மணமற்றவையும் கலந்துதான் உள்ளன. எங்களிலும் நல்லவர்களும் உண்டு” என்று வாதம் செய்து விலங்குகளிடம் நியாயம் கேட்டது.
ஆனால் எல்லா விலங்குகளும் அதை ஏற்பதாக இல்லை. ‘நீ இங்கிருந்து ஓடிப் போய்விடு’ என்று விரட்டின. மனம் உடைந்த நரி, மலை மீதேறி கிழே விழுந்து உயிரை விட்டுவிட முடிவெடுத்தது.
அப்போது அங்கிருந்த குயில், “நரி அண்ணே உங்கள் இனத்தின் அவப்பெயரை துடைக்க தானே புறப்பட்டு வந்தீர்? ஒரு லட்சியத்தை சுலபமாக அடைய முடியாது. விலங்குகள் போற்றும்படி செய்து அவைகளின் நம்பிக்கையைப் பெற்றால் உங்கள் குறிக்கோள் வெற்றி பெறும். மயற்சி செய்யுங்கள்” என்றது.
நீ சொல்வதும் சரிதான் என்ற நரி தற்கொலை முடிவை கைவிட்டது. புத்திசாலித்தனமாக செயல்பட முடிவெடுத்தது.
வேடர்கள் வலை விரித்திருந்ததைக் கூறி பறவைகளிடம் நன்மதிப்பைப் பெற்றது நரி. அதேபோல காலுடைந்த முயலை பத்திரமாக அதன் இருப்பிடத்திற்க்கு அழைத்து வந்து விட்டது. ஒரு மரத்தில் இருந்து தவறி விழுந்த குருவிக் குஞ்சை, அதன் கூட்டில் எடுத்து வைத்தது. இதைக் கண்ட தாய்ப்பறவை நரியை வாழ்த்தியது.
இப்படியே சின்னச் சின்ன உதவிகளைச் செய்து நரி கொஞ்சம் கொஞ்சமாக நற்பேர் பெற்று வந்தது.
ஒரு நாள் வேட்டைக்கார்கள், பெரிய பள்ளம் வெட்டி இலை தழைகளால் மூடி வைப்பதை நரி பார்த்தது. அந்தப் பக்கமாக வந்த யானைக் கூட்டத்தை எச்சரிக்கை செய்து அவற்றை காப்பாற்றியது.
யானைக்கூட்டம் காட்டுக்கு ராஜாவான சிங்கத்திடம் நரி செய்த உதவியை சொல்லின. அதேபோல முயல், புறாக்கள், பறவைகளும் தங்களுக்கு நரி செய்த நன்மையைக் கூறின. இதனால் சிங்கராஜா, நரிகளை தங்கள் காட்டில் சேர்த்துக் கொள்வதாக முடிவெடுத்தது. மற்ற மிருகங்களும் அதை ஆமோதித்தன.
பரதன் சந்தோஷமாக தங்கள் வசிப்பிடத்திற்குச் சென்றது. தங்கள் குழுவினருடன் தங்கள் சொந்த காட்டுக்கு திரும்பி வந்து வாழத் தொடங்கியது.
No comments:
Post a Comment