Wednesday, 4 January 2017

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் மதுரை


தமிழ் கோயில் ஏழு அதிசயத்தில் சேர்க்கவேண்டும் 

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோயில் நகரமான மதுரையின் மத்தியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர். இக்கோயிலே தமிழகத்தில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின் மூலக் கோயிலாக உள்ளது. இத்தலத்தில் முதல் பூசை அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகிறது

சிதம்பரம், காசி, திருக்காளத்தி வரிசையில் முக்கியமான 4வது தலமாக திருவாலவாய் உள்ளது இந்த நகரம் புராண காலத்தில் திருவாலவாய் என்று அழைக்கப்பட்டுள்ளது. இந்த தலத்தின் பெயரைக் கேட்டதுமே பேரின்ப நிலை கிடைக்கும்.அதனால் சிவபெருமானுடைய முக்தி தலங்களுள் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இத்தலத்தினை சிவன் முக்திபுரம் என்றும் அழைக்கின்றனர். இத்தலம் முக்கியமான சிவதலமாக மட்டும் இல்லாமல், அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் ஒன்றாகும். இதனை ராஜமாதங்கி சியாமள பீடம் என்று அழைக்கின்றனர்.  இத்தலம் 18 சித்தர்களில் ஒருவரான சுந்தரானந்தரின் சித்தர் பீடமாகவும் உள்ளது. விநாயகரின் அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடாகவும், சிவபெருமான் மீது பாடப்பெற்ற தேவாரப்பாடல் பெற்ற 274 வது சிவாலயமாகவும், 192வது தேவாரத்தலமாகவும் உள்ளது.

சிறப்புகள்

  • சிவபெருமான் நடனமாடியதாகச் சொல்லப்படும் ஐந்து முக்கிய தலங்களில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருத்தலமும் ஒன்று. இது ஐம்பெரும் சபைகளில் வெள்ளி சபை என்று போற்றப்படும் சிறப்புடையதாகும். மற்ற எல்லா இடங்களிலும் இடது காலைத் தூக்கி நடனமாடும் நடராசர், இங்கு வலது காலைத் தூக்கி வைத்து நடனமாடுகிறார்.
  • சுவாமி சந்நிதியில் கருவறையில் இறைவன் சுந்தரேசுவரர் சிவலிங்கத் திருமேனியாக அருட்காட்சி தருகிறார். இது கடம்ப மரத்தடியில் தோன்றிய ஒரு சுயம்பு லிங்கமாகும். குலசேகர பாண்டியன் காலத்தில் இதனை திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டக தேவாரப் பாடலில் குறிப்பிடுகிறார்.
  • சுந்தரேசுவரர் , சொக்கநாதர், சோமசுந்தரர் எனும் வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறார்.
  • சிவலிங்கம் பிற தலங்களாகிய .....மேருமலை, வெள்ளிமலை, திருக்கேதாரம், வாரணாசி மற்றும் பல பெருமை பெற்ற தலங்கள் எல்லாவற்றிலும் உள்ள சிவலிங்கங்கள் எல்லாவற்றிற்கும் முன்னே தோன்றியதாகும். எனவே இதற்கு மூலலிங்கம் என்ற பெயரும் உண்டு. இது குறித்து திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டக தேவாரப் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

  • இங்குள்ள மீனாட்சி அம்மன் சிலை மரகதக் கல்லால் ஆனது. எனவே மீனாட்சி அம்மனுக்கு மரகதவல்லி என்று இன்னொரு பெயரும் இருக்கிறது. மேலும் அங்கயற்கண்ணி, தடாதகை, கோமளவல்லி, பாண்டியராஜகுமாரி, மாணிக்கவல்லி, சுந்தரவல்லி என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.
  • ஈசனின் 64 திருவிளையாடல்களும் மதுரையிலேயே நடந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. சுவாமி சந்நிதி பிராகாரங்களில் 64 திருவிளையாடல் காட்சிகள் சிற்பங்களாக இருக்கின்றன.
  • இக்கோவிலின் தல மரம்: கடம்பம், புனித நீர்: பொற்றாமரைக்குளம் மற்றும் வைகை. பல நூறு வருடங்களுக்கு முன் இங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் கிடைக்கப்பெற்ற படிக லிங்கம், இன்றும் மதுரை ஆதீனத்தில் வழிபாட்டில் உள்ளது.
  • நவக்கிரங்களில் புதனுக்குரியதாக கூறப்படுகிறார் சுந்தரேசுவரர், சொக்கநாதர் என்றும் அறியப்படுகிறார். புதனுக்கான பரிகாரங்களை இக்கோவிலில் உள்ள சிவனுக்கு செய்வது வழக்கமாக இருக்கிறது.
  • மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலைச் சுற்றி ஆடி வீதிகளும், அதற்கு வெளியில் சித்திரை, ஆவணி, மாசி என சதுர அமைப்பிலான தமிழ் மாதப் பெயர்களினான தெருக்கள் இருக்கிறது.
  • மதுரையிலுள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் மீனாட்சி அம்மனை வழிபட்ட பின்பே சுந்தரேசுவரரை வழிபடும் வழக்கம் நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
  • உலக அதிசயங்களைத் தேர்வு செய்வதற்காக ஒரு இணையதளம் செய்த முயற்சியில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலும் ஒன்றாக இடம் பெற்றிருந்தது.

  • இங்குள்ள சிவன் சுந்தரேசுவரர் என அழைக்கப்படுகிறார். தேவாரக் காலத்தில் திருவாலவாய் என அழைக்கப்பட்டது.
  • இக்கோயிலின் வெளிப்பகுதியில் கோயிலைச் சுற்றி வருவதற்காக மின்கலத்தில் இயங்கும் வண்டிகள் இயக்கப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகள் இந்த வண்டிகளின் மூலம் கோயிலைச் சுற்றி வருவதில் மகிழ்ச்சி கொள்கின்றனர்.
.............

No comments:

Post a Comment