இமயமலை
இமயமலை பகுதிகளான உத்தர்காண்ட் அல்லது அஸ்ஸாமில் வரலாறு காணாத மிகப் பயங்கர நிலநடுக்கம் இன்றோ அல்லது 50 ஆண்டுகளிலோ உறுதியாக ஏற்படும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இமயமலை நாடான நேபாளத்தில் கடந்த சனிக்கிழமையன்று மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.9 அலகுகளாகப் பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இன்னமும் தொடர்ந்து அங்கு மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. இமயமலைப் பகுதியில் குறிப்பாக நேபாள நாட்டில் மிகப் பெரிய நிலநடுக்கம் எப்போது வேண்டுமானாலும் ஏற்படும் என கடந்த சில ஆண்டுகளாகவே விஞ்ஞானிகள் எச்சரித்து வந்தனர். இந்த எச்சரிக்கை பொய்யாகிப் போய்விடவில்லை.
நேபாளத்தை மட்டுமின்றி இந்தியா, திபெத்தையும் ஒரு கை பார்த்துவிட்டுத்தான் போயிருக்கிறது இந்த நிலநடுக்கம்.. இந்தியாவில் 100க்கும் மேற்பட்டோர் நிலநடுக்கத்துக்கு உயிரிழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இமயமலைப் பகுதிகளில் குறிப்பாக இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மிகப் பயங்கர நிலநடுக்கம் எப்போதுவேண்டுமானாலும் நிகழும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை இமயமலைப் பகுதி என்பது 2,500 கி.மீ நீளம் உள்ளது. ஜம்மு காஷ்மீர் தொடங்கி வடமேற்கில் அருணாசலப் பிரதேசம் வரை நீண்டு கிடக்கிறது.
இதில் வடகிழக்கு மாநில இமயமலைப் பகுதிகளில் நிலநடுக்கத்துக்கான அதிக வாய்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. நிலநடுக்கங்களின் பதிவுகள் அடிப்படையில் பார்த்தால் உத்தர்காண்ட் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் வரலாறு காணாத நிலநடுக்கம் ஏற்படக் கூடும் என்றே விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.
இது தொடர்பாக விஞ்ஞானி ஏ.பி.சிங் கூறுகையில், புள்ளிவிவரங்கள், இதற்கு முந்தைய நிலநடுக்க விவரங்களை வைத்துப் பார்த்தால் உத்தர்காண்ட் மற்றும் அஸ்ஸாமில் ரிக்டரில் 8 அல்லது 9 அலகுகள் அளவுக்குப் பதிவாகும் நிலநடுக்கம் ஏற்படும். இத்தகைய நிலநடுக்கம் இன்றோ அல்லது 50 ஆண்டுகள் கழித்தோ ஏற்படலாம் என்கிறார்.
மற்றொரு விஞ்ஞானி பல்லாபி செளத்ரி கூறுகையில், இமயமலைப் பகுதியில் உடனடியாக அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. இதனால் மிகப் பயங்கரமாக நிலநடுக்கம் ஒன்று விரைவில் ஏற்படும்.. இதனை அறிவியல் பூர்வமாக முன்னரே கண்டுபிடித்துவிட முடியாது என்கிறார்… இயற்கையின் கோரத்தை எதிர்கொண்டாக வேண்டும்.
No comments:
Post a Comment